பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.

 Today

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட பறையர் சமூகச் செப்பேடு.

-------------------------------



அமெரிக்காவில் கிடைத்தது.

-------------------------------


   பழனிமலை முருகனின் காலசந்திப்  பூசைக்காக பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:

   பழங்காலத்தில் பழனிமலை முருகனுக்கு காலசந்திப் பூசை, திருமஞ்சனக் கட்டளைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் நிறைய கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இந்தப்பட்டயம் அமெரிக்க நாட்டின் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்- நியூயார்க்கில் ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .அதில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இப்பட்டயத்தின் செய்தி, மேல்விபரம் தெரியவில்லை என்றும்  இப்பட்டயம் திருமதி W.J.கால்கன் (W.J COLHOUN) என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது.

   இச்செப்பேட்டை ஆராய்ந்ததில்  24 கொங்குநாடுகளைச் சேர்ந்த பறையர் சமூக மக்கள் பழனியில் ஒன்றுகூடி, பழனிமலை முருகனுக்கு நித்தியப்படிக்கு திருமஞ்சனம், சரமாலை, வில்வஅர்ச்சனைக்காக  திருக்கணக்குப் பண்டாரத்தை ஏற்பாடு செய்த செய்தி தெரியவருகிறது. 

 


   34.3 × 23.8 செ.மீ அளவுள்ள இச்செப்பேடு இரண்டு பக்கமும் 119 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.செப்பேட்டின் முகப்பில் பொன்காளி அம்மனும், அம்மனை வணங்கிய நிலையில் வேல் மற்றும் சந்திர சூரியர்களுக்கு நடுவில்  அப்புச்சியும் கோட்டுருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர். இடதுபுறம் முருகனும் முருகனின் காலடியில் பீடத்தில் அமர்ந்த நிலையில் சாமியாரும்  பொறிக்கப்பட்டுள்ளனர். பழனியில் எழுதப்படும் செப்பேடுகளில் வழக்கமாக முதலில் இடம் பெறும் பாடலான வையம் நீடுக எனும் பாடலுடன் செப்பேடு  தொடங்குகிறது.பிறகு 2 பாடல்களில் முருகனின் புகழ் கூறப்படுகிறது.

   செப்பேட்டில்  சாலிவாகன ஆண்டும் கலியுக ஆண்டும் தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளது.தமிழ் 'கர' ௵ பங்குனி  16 ௳ திங்கட்கிழமை பூச நட்சத்திரம் அமிர்த யோகம் பாலவா கரணம் கூடிய நன்னாளில் இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது.செப்பேட்டில் உள்ள கட்டையக் கவுண்டர் கோயில் குறிப்பின் அடிப்படையில் இச்செப்பேடு 27.03.1832 ல்-19 ஆம் நூற்றாண்டில்- எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.

    செப்பேடு,ஸ்தானம் சின்னோப நாயக்கர்,தவராச பண்டிதர்,பழனியப்ப நம்பியார்,பாணிபாத்திர உடையார்,தலத்துக்கணக்கு காத்தசாமி,பாலைய சாமியார்,பச்சக் கந்தையர்,பறையர்களின் குலகுரு சம்மந்த மூர்த்தி முன்னிலையில் எழுதப்பட்டுள்ளது.

     இதன்பிறகு பறையர் சமூகத்தின் புகழ் கூறப்படுகிறது.பறையர் சமூகத்தினர் திருவள்ளுவர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சலமுகன்,வேதமுகன்,புலிமுகன்,கரடிமுகன் ஆகிய சாம்புவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் 24 கொங்கு நாடுகளில் உள்ள 386 ஊர்களைச் சேர்ந்த 12 சாதிப்பறையர்களும் பழனியில் ஒன்றுகூடி அவர்களின் குலகுரு சம்மந்தமூர்த்தி மற்றும் முன்னிலை வகித்தவர்களுடன் சேர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு 120 பொன் கொடுத்து அபிசேகம் செய்து அதன் பிரசாதம் பெற்றார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.அத்துடன் இவர்கள் ஏற்பாடு செய்த  திருக்கணக்குப் பண்டாரத்துக்கு மாடுகள்,பிரார்த்தனைக் காணிக்கை, ரெட்டைப்பாக்கு வெத்திலை கொடுத்து நல்வாக்கும் கொண்டார்கள்.

   இனிமேல் முருகனின் நித்தியப்படி காலசந்திப் பூசைக்கும்,திருமஞ்சனக் கட்டளைக்கும்  தலைக்கட்டுக்கு 3 பணமும் பூசைச்செலவுக்கு 6 பணமும் கலியாணத்துக்கு மாப்பிள்ளை,பெண்வீட்டார் தலா 3 பணமும் 3 அமுதுபடியும் வரி கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடாகியது.இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்ட கட்டளைப் பண்டாரம் பறையரின் உயிரையும் உடலையும் கேட்க அதையும் குலகுரு முன்னிலையில் தாரதத்தம் செய்து கொடுத்தார்கள் என்று செப்பேடு கூறுகிறது.

   இந்த தர்மத்தை பிரபலம் செய்து வாக்கு,பொருள் உதவி செய்த பேர்கள் அசுவமேத யாகப் பலனையும்,தெண்டாயுதபாணியை தரிசித்த பலனையும்,1008 சிவகோபுரம்,108 வைணவக் கோபுரம் கட்டிய புண்ணியத்தையும்  பெறுவார்கள் என்றும் இதற்குக் கெடுதல் செய்தவர்கள், இந்தக் கோபுரங்களை இடித்த பாவத்தையும் 1000 சிசு,கர்ப்பம்,கர்ப்பிணியைக் கொன்ற பாவத்தையும் பெறுவார்கள் என்றும் சாபம் கொடுக்கப்பட்டுள்ளது.

         இத்துடன் பழனிஅடிவாரம் மேற்கு கிரிவீதியில் கட்டைய கவுண்டன் கோயிலுக்கு தென்புறம் ஒரு தண்ணீர்மடம் கட்டி பழனிக்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்து அந்த மடத்தையும் கட்டளைப் பண்டாரத்திடம் பறையர்  சமூகத்தினர் ஒப்படைத்திருப்பதாக செப்பேடு கூறுகிறது.

   இச்செப்பேடு பழனியில் இருந்து திருமதி W.J கால்கனின்  கைக்குச் சென்று அவரிடம் இருந்து பிறகு அமெரிக்கா சென்றது பற்றிய மேல்விபரங்கள் தெரியவில்லை என்றும் இந்த ஆய்வுக்கு விசிக மாவட்ட இளைஞரணி செயலாளர் வாஞ்சிநாதன் உதவி செய்தார் என்றும்  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்