செஞ்சி கோட்டை பகுதியில் இருக்கும் மலைகளுக்கு சதுர்க்கம் என்ற பெயர் 18ஆம் நூற்றாண்டில் வந்தவையே
ஔரங்கசீப்பின் திருவத்திமலை கல்வெட்டு
-----------------------------------------------
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டையில் 18ம் நுற்றாண்டில் எழுதப்பட்ட ஔரங்கசீப் காலத்திய தெலுங்கு மொழியிலான கல்வெட்டு
அண்ணமங்கலம் கிராமத்திலுள்ள மலையின் உச்சியில் சுமார் 1,000 அடி உயரத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கருங்கல் கோட்டைச் சுவற்றை ஒட்டிய பாறையில் தெலுங்கு எழுத்துக்களைக் கொண்டு பன்னிரெண்டு வரிகளில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைப்பும், அரசரின் பெயரையும் கொண்டு கல்வெட்டு வரிச் செய்திகள் சுமார் கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கொள்ளலாம்.
கல்வெட்டு வரிகள்:
ஸ்ரீ ராம வ .ர்தமான வைபவ நாம ஸம்வட்சர -பால்குன சுத்த 1 யாலு ம ஹா ராஜ ராஜ ஸ்ரீ ஆலம் கீரு பாதுஷா வாரி கார்ய தக்ஷுலையின ம ஹா ராஜ ராஜ ஸ்ரீ வேலு கோட்டி பங்கா ரு யாச்சம் நாயனி வாரு அம் ண்ண மங்கல துர்கம் (நூதநம்க திரு பனி வட்டி) துர்கம் அனி பேரு பெட்டெம் சேனு விப்பெட்டா சென்ன ரெட்டி காரினி தனெம் உ-சினபுடு சென்னா ரெட்டி காரு கட்டிம்சின-கோட்ட மகாலு.
இதன் பொருள்:
விபவ வருடம் பங்குனி மாதம் முதல் நாள் மகா ராஜ ராஜ ஸ்ரீ ஆலம்கீர் பாதுஷா (அவுரங்கசீப் பாதுஷா) அவர்களின் ஆணைக்கிணங்க அவருடைய ஆளுமைக்குக் கீழ்படிந்த இருபத்திரண்டாம் ஜமீன்தார் வேலு கோட்டி பங்காரு யாச்சம நாயுடு அவர்கள், அம்மண மங்கலம் கோட்டை என்ற பெயரை மாற்றி புதிதாக திரு(வத்தி)துர்கம் என்று அழைக்கச் செய்தார் என்றும், மேலும் விப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சென்னா ரெட்டி என்பவர் மலையின் மீது ஒரு புதிய மகாலையும் அமைத்தார் என்ற செய்தியையும் இக்கல்வெட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறது.
தற்சமயம் இம்மலை திருவத்திமலை என்றும் அழைக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------
Comments